‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்திருந்த கதிர் – ஆனந்தி இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் அனைவராலும் பாராட்டப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்கள் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி. தற்போது இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ‘கைதி’ படத்தில் நடித்திருந்த நரேன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ ஏ ஏ ஆர் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸாக் ஹாரிஸ் இயக்குகிறார். இதுகுறித்து ஏ ஏ ஏ ஆர் புரோடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர், ‘தமிழ் திரையுலகில் தனி திறமையால் பாராட்டைப் பெற்ற நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி இருவரும் எங்கள் படத்தில் இணைந்தது மகிழ்ச்சி.
இவர்கள் மிகத் தரமான படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளார்கள் . மேலும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்திருந்த கதிர்-ஆனந்தி கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக இருந்தது . இந்த படத்திற்கு பிறகு நடிகர் கதிர் மிகப்பெரும் உயரத்திற்கு செல்வார். இந்த படத்தில் நடிக்க பிரபல கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் ,நடிகர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் . அடுத்த வருடம் தொடக்கத்தில் படப்பிடிப்பை தொடங்கி கோடை காலத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’ எனக் கூறியுள்ளார் .