மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவியை அவதூறாகப் பேசிய பாஜக தலைவரு மீது சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
மறைந்த பால் தாக்கரேவின் மருமகளும், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவியுமான ராஷ்மி குறித்து பாஜக தலைவர் ஜிதேன் கஜாரியா என்பவர் அவதூறு பேசியதற்கு மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.பாஜகவின் மகாராஷ்டிர மாநில ஐடி பிரிவு தலைவராக இருப்பவர் கஜாரியா,இவர் ஜனவரி 4ம் தேதி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ராஷ்மி உத்தவ் தாக்கரேவை, மராத்தி ராப்ரி தேவி என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இவரது டிவீட் குறித்து சிவசேனா கட்சி சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீஸார் கஜாரியாவை நேரில் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கஜாரியாவுக்கு மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிஷோரி பெட்னேகர் கூறுகையில், யார் இந்த கஜாரியா?. தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு கட்சி தாவியவர். இன்று மகாராஷ்டிர பெண்கள் குறித்து தவறாகப் பேசியுள்ளார். அண்ணி ராஷ்மி மறைந்த பால் தாக்கரேவின் மருமகள். அவரை எப்படி அவமானப்படுத்தி கஜாரியா பேசலாம்?ராஷ்மி குறித்துப் பேச என்ன காரணம் இருக்கிறது அவரிடம்?. அவர் முதல்வரின் மனைவி, ஆதித்யா தாக்கரேவின் தாயார். இதைத் தாண்டி இவர்கள் விமர்சனம் செய்ய என்ன இருக்கிறது?.மகாராஷ்டிராவில் பாஜக வளர்ச்சி பெற பால் தாக்கரேதான் காரணம். அவர்தான் பாஜகவை அரசியலில் வளர்த்து விட்டவர். இன்று அவரது மருமகளையே தவறாகப் பேச துணிந்து விட்டனர் பாஜகவினர். எங்கிருந்து அவர்களுக்கு இந்த தைரியம் வந்தது. கஜாரியாவுக்கு தைரியம் இருந்தால் சிவசேனாவின் மகளிர் அணி முன்பு வந்து இப்படிப் பேசட்டும் பார்ப்போம். அவர்கள் அவருக்கு உரிய பதிலடியைக் கொடுப்பார்கள் என்றார்.