Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவங்க 2 பேரும் இல்லாதது அணிக்கு பாதிப்பு தான்…. “ஆனா இதுலயும் ஒரு நல்லது இருக்கு”…. ரவி சாஸ்திரி சொல்வது என்ன?

 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு பின்னடைவு என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது. இதில் இந்திய அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால் பதித்துள்ள நிலையில், தன்னுடைய முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி மெல்போர்னில் எதிர்கொள்கிறது. இந்த லீக் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி அதன் இரண்டு ஐசிசி பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (17ஆம் தேதி) மற்றும் நியூசிலாந்தை (19ஆம் தேதி) எதிர்கொள்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்று முன்தினம் அதிகாலை மும்பையிலிருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சென்றது. அதனைத்தொடர்ந்து இந்தியா அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே டி20 உலக கோப்பை தொடரிலிருந்து  ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகி உள்ளனர். இவர்கள் இருவரும் இந்திய அணியில் இருந்து விலகி இருப்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த வியாழன் அன்று சென்னை லாலாஜி மெமோரியல் ஒமேகா பள்ளியின் கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், இந்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா இல்லாதது துரதிர்ஷ்டவசமானது.  டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், ஒரு புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு இது ஒரு வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது, பும்ரா காயமடைந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இப்போது நிறைய கிரிக்கெட் விளையாடுகிறார்கள், அதனால் காயமடைகிறார்கள். பும்ரா காயமடைந்தார், ஆனால் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் சிறப்பாக செயல்பட ஒரு வாய்ப்பாக அமையும். காயத்தால் நீங்கள் எதுவும் செய்ய முடியாது. விளையாட்டின் மிக நீண்ட வடிவத்தில்  பும்ரா இல்லாதது இந்தியாவிற்கு ஒரு புதிய சாம்பியனைக் கண்டுபிடிக்க வாய்ப்பாக இருக்கும் என்றார்..

மேலும் அவர் எங்களுக்கு போதுமான பலம் கிடைத்துள்ளது மற்றும் எங்களிடம் ஒரு நல்ல அணி உள்ளது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அரையிறுதிக்கு முன்னேறினால், அது யாருடைய போட்டியாகவும் இருக்கலாம் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நன்றாகத் தொடங்கி, அரையிறுதிக்கு வருவதே முயற்சியாக இருக்கும், அரையிறுதிக்கு முன்னேறிய பின்னர் உலக கோப்பையை வெல்ல போதுமான பலம் கிடைத்து விடும். பும்ரா இல்லை, ஜடேஜா இல்லை இது அணிக்கு பின்னடைவு தான். ஆனால் இது ஒரு புதிய சாம்பியனைக் கண்டறிய ஒரு வாய்ப்பு ”என்று கூறினார்.

 

Categories

Tech |