மருமகனை ஆள் வைத்து கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையின் முன்பு கடந்த 19-ஆம் தேதி வாலிபர் ஒருவரின் பிணம் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த வாலிபர் கருக்கனஅள்ளி பகுதியை சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவரது மாமியார் சகுந்தலா என்பவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் கூறியதாவது. எனது மகள் சாமுண்டீஸ்வரிக்கும் சூர்யாவுக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் எனது மகள் சாமுண்டீஸ்வரி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆனால் சூர்யா வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு எனது மகளிடம் தகராறு செய்துள்ளார். இதனை அறிந்த நான் சூர்யா இறந்தால் தான் என் மகள் நிம்மதியாக இருப்பாள் என கருதி சூர்யாவை கொலை செய்ய முடிவு செய்தேன்.
அதேபோல் 2 பேரிடம் சூர்யாவை அழைத்து சென்று மது வாங்கி கொடுக்குமாறு பணம் கொடுத்து அனுப்பினேன். அதன்படி அவர்களும் சூர்யாவுக்கு மது வாங்கி கொடுத்தனர். பின்னர் அவர்கள் போதையில் இருந்த சூர்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டனர் என கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சகுந்தலாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.