குற்றவாளியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பாபு என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சட்டவிரோதமாக அதே பகுதியில் சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பாபுவை கைது செய்தனர்.
இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாபுவை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளார். அதனால் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் பாபுவை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி காவல் துறையினர் பாபுவை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட பாபுவின் மீது 22 சாராய வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.