தேர்தல் பணியில் ஈடுபடாத அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வரும் 10 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பு ஊதியமும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்களில் சுமார் 92 ஊழியர்கள் தேர்தல் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கான காரணத்தை கேட்டு 25 ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் பணிகளுக்கு வர தவறிய அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாது எனவும் தெரிகிறது. இதற்கிடையில் தேர்தல் பணிக்கு வராத வரை அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் அளிக்கும் விளக்கம் சரியாக இல்லாத பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.