மாவட்ட ஆட்சியர் பனைவெல்லம் தயாரிப்பதற்கான பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மண்டல பனைப்பொருள் பயிற்சி நிலையத்தில் வைத்து தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்றவை தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மேயர் தாமரைச்செல்வன், மாநில பனைவெல்லம் விற்பனை கூட்டுறவு இணை மேலாண்மை இயக்குனர் கண்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு, பிரசன்னகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பனைத்தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மற்றும் பனைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2021-2022 நிதி ஆண்டில் சுவையான பனைவெல்லத்தின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக பனைத் தொழிலார்களுக்கு பயிற்சி வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி இந்த பயிற்சியில் கலந்து கொண்ட 50 பேருக்கு 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முடிந்தவுடன் அவர்கள் சுலபமாக தொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்த பனைவெல்லம் தயாரிப்பதற்கு தேவையான கொப்பரை, குண்டான் போன்ற அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். மேலும் தயாரிக்கப்படும் பனைவெல்லம் மற்றும் பனங்கற்கண்டு மிகவும் அதிக மருத்துவ குணம் அடங்கிய பொருளாகும். இதனால் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்துடன் இணைந்து பதநீரில் இருந்து மற்ற இயற்கை மருத்துவ பொருட்களை தயாரிக்க முயற்சி செய்ய வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.