தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், சட்டபூர்வ வாரியங்கள், அரசுக் கழகங்களின் ஊழியர் சேர்க்கை தொடர்பான பணிகள் TNPSC தேர்வு வாரியத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், குடிசை மாற்று வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், என அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கழகங்களுக்கு TNPSC தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்படும்.
இதுவரை மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு அந்தந்த துறை சார்ந்து நேரடி பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நேரடி நியமனத்தில் சில அரசியல் தலைவர்களின் தலையீடு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அரசின் இந்த அதிரடி முடிவால் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பணி என்னவாகும் என அந்தந்த துறை சார்ந்த ஊழியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனினும் தமிழக அரசின் இத்தகைய முடிவு தன்னார்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.