2007ஆம் வருடம் பழங்குடியினர் நல வாரியம் அமைக்கப்பட்டு வாரிய அட்டை பெற்று இருக்கும் உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, ஈம சடங்கிற்கான உதவித்தொகை, மரணமடைந்தவரின் குடும்பத்திற்கான உதவி, முதியோர் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து நல வாரியங்களாலும் இது போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சீர்மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால் வழங்கப்படும் நிதி உதவியை ரூபாய் 20 ஆயிரம் ஆகவும், ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதியுதவியை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதைப்போலவே பழங்குடியினர் நலத்துறையில் உள்ள பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கும் உதவித் தொகை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.
இந்நிலையில் பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இயற்கை மரணம் உதவித் தொகை 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ஆகவும், ஈமச்சடங்கு உதவித்தொகை 2 ஆயிரத்திலிருந்து, 5 ஆயிரமாகவும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து ,இதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.