உலக சுகாதார நிறுவனம், உலகில் மொத்த மக்களில் 10% க்கும் குறைவானவர்களுக்கே கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகமாக மக்கள் கூட்டம் உள்ள நகர்ப்புறங்களில் 50 முதல் 60 சதவீதம் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும் உருவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க இருக்கும் ஒரே வழி தடுப்பூசி செலுத்துவது தான்.
இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நிலை போன்றவற்றில் இருந்து நல்ல பலனை தருகின்றன. எனினும் அதே நேரத்தில் அறிகுறிகள் ஏற்படாமல் கொரோனா பாதிப்பு, சிறிய பாதிப்புகளுடன் ஏற்படுவது போன்றவற்றிற்கு எதிராக தடுப்பூசி செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.