வீட்டுமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நீர்நிலை புறம்போக்கில் வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், ராதாகிருஷ்ணன், கீதா, முத்துக்குமரன், சங்கரன், மூர்த்தி, வேல் மாறன், ராஜேந்திரன், அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுக்களை கொடுக்க வேண்டும் என கூறினர். ஆனால் அதிகாரிகள் சிலரை மட்டும் அனுமதிப்பதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மீண்டும் வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மனுவை ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.