சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்த ராஜா முகம்மது (26) சென்ற ஒரு வருடமாக திருவள்ளூர் லங்காகார தெருவிலுள்ள தன் மாமனார் வீட்டில் தங்கி இருந்து காக்களூர் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலைசெய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை குற்றப் புலனாய்வு சிறப்பு பிரிவு காவல்துறையினர் இவரை திருவள்ளூரிலுள்ள அவரது மாமனார் வீட்டில் வைத்து திடீரென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். இதற்கிடையில் முன்பாக ராஜா முகம்மது சவுதி அரேபியாவில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், சிக்னல் என்ற செயலியில் தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்ந்து பேசி வந்ததாகவும் குற்றப்புலனாய்வு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்படி மணவாளநகர் காவல் நிலையத்தில் வைத்து சுமார் 18 மணிநேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உளவுத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சட்ட விரோதமாக செயல்படும் சிக்னல் என்ற சமூகவலைத்தளத்தில் தேசவிரோதிகளுடன் பேசியதாகவும், அதில் பேசிய நபர் ராஜா முகம்மதுவை சவுதிக்கு வரும்படியாகவும், அதற்கான பாஸ்போர்ட் ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறியது தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி ராஜா முகம்மது அவரது முகநூல் பக்கத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டதுடன், இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறி திருவள்ளூர் டவுன் காவல்துறையினர் அவர் மீது பல வழக்குகளை பதிவு செய்தனர். அதன்பின் குற்றவியல் நடுவர் நீதிபதி மூகாம்பிகை முன்னிலையில் ஆஜர்படுத்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை சிறைச்சாலையில் அடைத்தனர்.