Categories
சினிமா

“இவர்கள் அனுப்பும் சில லட்சத்திற்காக காத்து இருக்கிறேன்”… கவிஞர் வைரமுத்து ஆதங்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியராக விளங்குபவர் கவிஞர் வைரமுத்து. இவர் நிழல்கள் எனும் படத்தில் பொன்மாலைப் பொழுது எனும் பாடலின் வாயிலாக அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்தார். இவர் இதுவரையிலும் 7500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவர் சிறந்த பாடல் ஆசிரியருக்கான இந்திய அரசின் விருதை 7 முறை பெற்றுள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற இசை மற்றும் பாடல்களுக்கான காப்புரிமை குறித்து கருத்தரங்கில் அவர் வேதனையாக பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது “கலைஞர்கள் பாவம், கலைஞர்கள் கற்பனாவாதிகள், கலைஞர்கள் சட்டம் அறியாதவர்கள், கலைஞர்கள் உரிமை தெரியாதவர்கள். மேலும் பூமியில் நின்று கொண்டு நட்சத்திரங்களில் தேன்குடிக்க ஆசைப்படுபவர்கள். தாய்ப் பாலுக்கும் நிலாப் பாலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் ஆவர். அவர்கள் சட்டம் குறித்து எதுவும் அறியார். என்னுடைய மூத்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு முறை என்னிடம் கூறினார். எனக்கு ஸ்வரங்கள் மொத்தம் 7, சரிகமபதநிச அதற்கு பின் எனக்கு நம்பர் தெரியாது. அந்த ஸ்வரங்கள் வரைக்கும்தான் தனக்கு தெரியும். ஆனால் தற்போது பல்வேறு விஷயங்களை கூறுகின்றனர்.

ஐபிஆர்எஸ் வருவதற்கு முன்பாக எங்களுக்கு ராயல்டி அல்ல நாயர் டீ கூட கிடைக்காது. அதற்குபின் தான் ராயல்டி என்ற பேச்சே எங்களுக்கு வந்தது. மேல் நாடுகளில் ஒருவன் 100 பாட்டுக்கு மேல் எழுதி விட்டால் அவன் அதற்கு பின் வாழ்க்கையில் சுவாசிப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய தேவை இல்லை. அந்த 100 பாட்டுக்கு வரக்கூடிய ராயல்டியில் ஒரு தீவே வாங்கி விடலாம். அந்த பணம் செலவழிந்தால் அவன் மீண்டுமாக கரைக்கு வந்து ஒரு 5 பாட்டு எழுதிவிட்டு திரும்ப தீவுக்கு போய் விடலாம். நான் 7,500 பாட்டு எழுதி இருக்கிறேன். இதனிடையில் இவர்கள் அனுப்பக்கூடிய சில லட்சத்துக்காக காத்து இருக்கிறேன்” என வைரமுத்து ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

Categories

Tech |