Categories
உலக செய்திகள்

இவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள்…. நாடாளுமன்ற சபாநாயகர் உறுதி…!!

முகக் கவசம் அணியாமல் நாடாளுமன்ற சபைக்கு வருபவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆனது 45 லட்சத்தை நெருங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. அதனால் அமெரிக்காவில் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். இத்தகைய நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சபை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் நான்சி பெலோசி, இந்த விதிமுறையை மீறுபவர்கள் எவராக இருந்தாலும் அறையிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெக்சாஸ் என்ற மாகாணத்தைச் சார்ந்த குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லூயி கோமெர்ட்(66) முகக் கவசம் அணியாமல் நாடாளுமன்றத்தில் பல முறை சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சபாநாயகர் நான்சி பெலோசி, முக கவசம் அணிய வேண்டும் என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்து இருக்கிறார். சபையில் யாராவது முக கவசம் அணியாமல் இருந்தால், அவர்கள் கட்டாயம் சபையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என சபாநாயகர் எச்சரித்துள்ளார். மேலும் முக கவசம் அணியாமல் யார் சபைக்கு வருகிறார்களோ அவர்களை சபை காவலர் வெளியே அனுப்புவார் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சபை அறிக்கையில், ” அனைவரின் உடல்நலம், பாதுகாப்பு, நல்வாழ்வுக்கான அடையாளமாக அனைத்து உறுப்பினர்களும், ஊழியர்களும் கட்டாயம் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் மூன்று பேரும், குடியரசு கட்சி எம்.பி.க்கள் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சபாநாயகர் நான்சி பெலோசியின் முகக் கவசம்  பற்றிய கண்டிப்பான அறிவிப்பு மிக முக்கியமாக கருதப்படுகிறது.

Categories

Tech |