Categories
மாநில செய்திகள்

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது….. இந்திய அரசு துணை நிற்க வேண்டும்….. ராமதாஸ் வேண்டுகோள்…!!

இந்திய அரசாங்கம் சிங்கள போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொழுது துணை நிற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “வெளிநாடு வாழ் தமிழர் அமைப்புகளுடன், இலங்கை இனச் சிக்கல்களை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டவர்களை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய உள்ளதாகவும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். இது உலக மக்களையும், ஈழத் தமிழர்களையும் ஏமாற்றும் சதி செயலாகும். ஐநா சபையானது இலங்கையில் நடந்துள்ள போர்க்குற்றங்கள் பற்றிய 1.20 லட்சத்திற்கும் மேலான ஆதாரங்களை திரட்டி உள்ளது.

மேலும் கூடுதல் தகவல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் சேகரிக்க உள்ளதாக பாச்லெட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் போர்க்குற்றங்களை குறித்து நடத்தப்படும் விசாரணையானது தீவிரம் அடைவதைக் தடுப்பதற்காகவும், உலக நாடுகளில் இருந்து வரும் கண்டனத்திலிருந்து தப்பிக்கவும் தான் கோத்தபய சமாதானத் தூதுவராக மாறியுள்ளார். போர்க் குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையம் ஏற்படுத்தி உள்ள பன்னாட்டு நெறிமுறையானது இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து ஆவணப்படுத்தும்.

ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து போர் குற்றவாளிகளுக்கும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு எந்த ஒரு பன்னாட்டு நீதி குற்றவியல் மன்றங்களிலும் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு தண்டனை பெற்று தர இயலும். இதனை குறித்த பயம் தான் கோத்தபயவை இப்படியெல்லாம் பேச வைத்திருக்கிறது. இதன் நிறைவாக இந்தியாவானது ஐ.நா. வுடன் இணைந்து உலகம் முழுதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனி தமிழகம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |