பாகிஸ்தானில் இம்ரான்கானின் ஆட்சி கலைக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் அடுத்த வெளியுறவுத் துறை மந்திரியாக பிலாவல் பூட்டோ நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். இதன் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 174 உறுப்பினர்கள் பாகிஸ்தானின் பிரதமருக்கு எதிராக வாக்களித்ததால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நேற்று பாகிஸ்தானின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக அந்நாட்டின் நாடாளுமன்றம் கூடியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் அடுத்த வெளியுறவுத் துறை மந்திரியாக பிலாவல் பூட்டோ நியமிக்கப்பட்டதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னை புதிய வெளியுறவுத் துறை மந்திரியாக நியமிப்பது குறித்து கட்சி தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், விக்கெட்டை கொடுத்துவிட்டு ஆடுகளத்தை விட்டு ஓடி வரும் முதல் கேப்டன் இம்ரான்கான் தான் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே 33 வயதான பிலாவல் பூட்டோ பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.