சட்டீஸ்கர் மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் அசோக் பவார் இவருடைய உதவியாளர் ஆனந்த் யாதவ் இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மாவோயிஸ்டுகள் அவர்களை காட்டுக்குள் கடத்திச் சென்றனர். இதனையடுத்து அசோக் பவாரின் மனைவி மாவோயிஸ்டுகளிடம் தன்னுடைய கணவரை விட்டு விடுமாறு கண்ணீர் மல்க பேசி வீடியோ ஒன்றை எடுத்து அனுப்பி வைத்தார். ஆனால் மாவோயிஸ்டுகளிடமிருந்து அதற்கு தகுந்த பதில் வரவில்லை. இதனால் இருவரின் குடும்பங்களும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தன. இதனைத் தொடர்ந்து அசோக் பவாரின் மனைவி சோனாலி தன் கணவனை மீட்டெடுக்க தானே நேரில் சென்று மாவோயிஸ்டுகளிடம் பேசி கணவனை விடுவிக்குமாறு கூறப் போவதாக அபுஜுமாத் காட்டுப்பகுதிக்குள் தனது ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றார்.
இந்நிலையில் தற்போது அசோக் பவாரை மாவோயிஸ்டுகள் விடுவித்து விட்டனர். ஆனால் அவரை தேடிச் சென்று அவருடைய மனைவி சோனாலி இன்னும் காட்டுக்குள்தான் இருக்கிறார். அவருடன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் போலீசார் தொடர்பில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் சோனாலி காட்டு பகுதியில் இருந்து வெளியே வந்துவிடுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். கணவனை தேடி காட்டுக்குள் தனியாக சென்ற பெண்ணின் துணிச்சலை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.