போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டு சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த லாரி பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 35 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரான கணேசமூர்த்தி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் காவல்துறையினரிடம் நியாயம் கேட்டனர். ஆனால் காவல்துறையினர் கணேசமூர்த்தியின் மீது தவறு இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் நேற்று மதியம் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராம்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டதில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்று பேருந்துகளை இயக்கியுள்ளனர். இதனால் 3 மணி நேரம் பயணிகள் காத்திருந்துள்ளனர்.