வார்டு உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலை ஊராட்சி மன்றத்தில் தலைவராக கஸ்தூரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வார்டு உறுப்பினர்கள் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, கள ஆய்வாளர் சசிதரன், ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணாவில் ஈடுபட்டவர்களை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் வார்டு உறுப்பினர்கள் அதிகாரிகள் அனைவரையும் அலுவலகத்திற்கு உள்ளே வைத்து பூட்டிவிட்டு மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். அதன்பின்னர் அலுவலகத்தில் அடைத்து வைத்திருந்த அதிகாரிகளை வெளியே விட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.