மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கத்தினர் 2017-18 ஆம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மடிக்கணினியை உடனே வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாணவி கீர்த்திகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகுத்துள்ளனர். இதற்கு மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அரசால் வழங்கக்கூடிய மடிக்கணினியை உடனே வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியருக்கு இதுகுறித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், 2017-18 ஆம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை என்றும், தற்போது அந்த மாணவர்கள் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வரும் நிலையில் கூட மடிக்கணினி வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக அந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.