பெரம்பலூரில் கொள்முதல் செய்யப்படாமல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வட்டத்தில் ஒகளூர், அகரம்சீகூர், துங்கபுரம், மண்டபம், காடூர் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் திறக்கப்பட்டன. இதையடுத்து அங்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த கொள்முதல் நிலையங்களில் கடந்த 20 நாட்களாக முறையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. மேலும் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
விவசாயிகள் வெயில் மற்றும் மழையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தார்ப்பாய் கொண்டு நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க மூடி வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளானர். தற்போது கொள்முதல் செய்யாமல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. அது முளை விடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் உடனடியாக கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.