சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தங்கமணி திரையரங்கு அருகில் வசித்து வந்தவர் ரஞ்சிதம். தெம்மாப்பட்டு பகுதியிலுள்ள உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக ரஞ்சிதம் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜேந்திரன் சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கிறது. அத்துடன் ரஞ்சிதத்தின் மகள் பட்டுக்கோட்டை பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருவதாகவும், அவரின் மகன் கோவை மருத்துவ கல்லூரியில் தங்கி படித்து வருவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ரஞ்சிதம் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். தலைமை ஆசிரியை என்பதால் பள்ளியிலுள்ள சாவிகள் அனைத்தும் ரஞ்சிதத்திடம் இருந்துள்ளது.
அவ்வாறு இருக்கையில் தலைமை ஆசிரியையான ரஞ்சிதம் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு வராத அவரை தொடர்புகொள்ள சக ஆசிரியர்கள் போனில் அழைத்துள்ளனர். ஆனால் பலமுறை முயற்சித்தும் ரஞ்சிதம் போனை எடுக்கவில்லை. இதன் காரணமாக பள்ளியில் காத்திருந்த ஆசிரியர்கள் நேரடியாக ரஞ்சிதம் வீட்டிற்கும் வந்து பார்த்துள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆசிரியைகள் அங்கே வந்தபோது, ரஞ்சிதம் வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது.
அதன்பின் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்த நிலையில், உள்ளே சென்று பார்த்தபோது ரஞ்சிதம் உயிரிழந்து கிடந்துள்ளார். இதை கண்டதும் சக ஆசிரியைகள் உடனே காவல்துறையினருக்கு இது பற்றி தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரஞ்சிதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி நடந்த முதற்கட்ட விசாரணையில், ரஞ்சிதம் கழுத்தில் கிடந்த நகை மற்றும் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. தலைமை ஆசிரியை தன் வீட்டில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.