மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை வரும். இந்த அமாவாசையில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதில் குமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்நிலையில் இன்று ஏராளமானோர் கடல் பகுதியில் குவிய தொடங்கினர். மேலும் அவர்கள் கடலில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் கரைக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்த புரோகிதர்கள் மற்றும் வேத மந்திரி ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பூஜை செய்துள்ளனர்.
இந்த பூஜையில் பச்சரிசி, எள்ளு, பூக்கள் போன்றவை ஒரு வாழை இலையில் வைத்து அதனை தலையில் சுமந்து கொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களின் நினைத்து தர்ப்பணம் செய்தார்கள். பின்னர் பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், குகநாதீஸ்வரர் கோவில், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.