மகாராஷ்டிராவில் கடந்த 2015 ஆம் வருடத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு தற்போது 3 வருடங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 வருடத்தில் மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள நேருள் என்ற பகுதியில் வசிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளார். இதனால் சிறுமியின் வகுப்பு ஆசிரியர் ஒருவர் தன் வீட்டிற்கு டியூஷன் வருமாறு கூறியிருக்கிறார்.
எனவே வகுப்பு ஆசிரியரிடம் டியூஷனுக்கு சென்றால் நம்மை தேர்ச்சி பெற வைப்பார் என்ற நம்பிக்கையில் சிறுமி தன் பெற்றோரிடம் கூறிவிட்டு டியூசன் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து டியூஷனுக்கு சென்ற அச்சிறுமி மீது அந்த ஆசிரியருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியை அடிக்கடி தொட்டு பாடம் நடத்தியுள்ளார்.
இதனை வெறுத்த அந்த மாணவி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக சகித்து கொண்டு தினம் தினம் துன்பப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அந்த ஆசிரியர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வீட்டிற்கு சென்று தன் பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வழக்கு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 5 வருடங்களாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் தற்போது அந்த ஆசிரியருக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.