கலியுகம் பற்றிய கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறிய விளக்கம் பற்றி நாம் அறிவோம்..!
கிருஷ்ணரின் நண்பராகவும் தேரோட்டியாகவும் இருந்த உத்தமர் ஒருசமயம் கிருஷ்ணரிடம் கேட்கிறார், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகை, உலகத்தின் நிலையே இப்படி இருக்கிறது மாதவா, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகையை அடுத்து வரப்போகும் கலியுகம் எப்படி இருக்கும். அதை எனக்கு எடுத்து கூறுவாயா என்கிறார்..!
கிருஷ்ணர் கூறுகிறார்.. இதே கேள்வியை என்னிடம் ஒரு சமயம் அர்ஜுனனும், பீமனும், நகுலனும், சகாதேவனும் கேட்டனர். நான் என்ன பதில் கூறினேன் என்பதை உங்களிடம் சொல்கிறேன் கேளுங்கள் என்கிறார். கலியுகம் பற்றி பகவான் கிருஷ்ணன் கூறிய பதிலை உத்தம கீதையின் மூலம் நாம் அறியலாம் வாருங்கள்..!
அர்ஜுனனும், பீமனும், நகுலனும், சகாதேவனும் கிருஷ்ணரிடம் வந்து கலியுகம் எப்படி இருக்கும்.? கலியுக மக்கள் எப்படி இருப்பார்கள்.? இப்படி கலியுகத்தை பற்றிய பல தகவல்களை நாங்கள் அறிய விரும்புகிறோம் என்கின்றனர். அதற்கு கிருஷ்ணர் அதைப்பற்றி நான் உங்களிடம் கூறுவதைவிட நீங்களே கண்கூடாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நான்கு அம்புகளை எடுத்து நான்கு திசைகளில் செலுத்துகிறார்.
அதன்பிறகு அந்த நான்கு பாண்டவர்களையும் அந்த அம்புகளை தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருமாறு கூறுகிறார். கலியுகத்தை பற்றி அறியும் ஆர்வத்தில் நால்வரும் நான்கு திசையை நோக்கி வேகவேகமாக செல்கின்றார்.
முதலில் அம்பு இருக்கும் இடத்தை அடைந்த பீமன் அங்கு ஒரு காட்சியைக் காண்கிறார்..!
அந்த இடத்தில் 5 கிணறுகள் இருக்கின்றது. அதில் ஒரு கிணறு மத்தியில் அதை சுற்றி நான்கு கிணறுகளும் இருக்கின்றது. மத்தியில் இருக்கும் கிணற்றில் நீர் வற்றி இருந்தது ஆனால் சுற்றியிருந்த நான்கு கிணற்றிலும் தண்ணீர் நிரம்பி வழிந்தது. அதை கண்ட பீமன் குழம்பி போனான், என்ன இது விசித்திரமாக உள்ளதே என்று சிந்தித்தவாறே அவன் அம்பை எடுத்துக்கொண்டு கிருஷ்ணர் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.
அடுத்ததாக அம்பு இருக்கும் இடத்தை அடைந்த அர்ஜுனன் ஒரு குயிலின் இனிமையான பாடலை கேட்டு கொண்டே சத்தம் கேட்கும் திசையை நோக்கி திரும்பிய அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த குயில் ஒரு வெண்முயலை கொடூரமாக கொத்தி தின்று கொண்டிருந்தது. அந்த வெண்முயல் பரிதாபமாக வலியில் துடித்துக் கொண்டிருந்தது. என்ன இது இவ்வளவு எளிய ஓசை கொண்ட ஒரு குயிலுக்கு இவ்வளவு கொடிய மனமா என்று சிந்தித்தவாறே அந்த அம்பை எடுத்துக் கொண்டு கிருஷ்ணர் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான் அர்ஜூனன்.
மூன்றாவதாக அம்பு இருக்கும் இடத்தை அடைந்த சகாதேவன் அங்கு ஒரு காட்சியைக் கண்டான்.. பசு ஒன்று கன்று குட்டியை ஈன்று எடுத்தது. அதன் உடல் முழுவதையும் தன் நாவால் நக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தது. அந்த கன்று குட்டியின் உடல் முழுவதும் சுத்தமான பிறகும் அந்தப் பசு அதை தொடர்ந்து நக்கிக் கொண்டே இருந்தது.
அதை கண்ட அங்கிருந்த பலர் அந்த கன்று குட்டியை தாய் பசுவிடம் இருந்து எடுக்க முயன்றனர், ஆனால் அந்த தாய் பசு கன்று குட்டியை விடாமல் பிடித்தது அதன் விளைவாக அந்தக் கன்றுக்குட்டி உடலில் காயங்கள் உண்டாகின, அது ஒரு தாய் எப்படி தன் கன்று குட்டியை காயப்படுத்த முடியும் என்ற குழப்பத்தோடு அந்த அம்பை எடுத்துக் கொண்டு அவனும் கிருஷ்ணர் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.
நான்காவது ஒரு பெரிய மலை மேல் கிருஷ்ணர் எய்த அம்பு இருப்பதை கண்ட நகுலன் அதை எடுக்க சென்றான், அப்பொழுது ஒரு பெரும்பாறை மிக வேகமாக உருண்டு ஓடி வந்தது. அந்தப் பாதை வழியில் இருந்த அத்தனை மரங்களையும், தடைகளையும் இடித்து தள்ளி வேகமாய் உருண்டோடி வந்தது. அப்பொழுது அந்தப் பாறை ஒரு சிறிய செடியின் மீது மோதி அப்படியே நின்றுவிட்டது.
அதைக்கண்ட நகுலனுக்கு ஒரே ஆச்சரியம் இவ்வளவு பெரிய பாறை எப்படி ஒரு சிறிய செடியின் மீது மோதி நின்றுவிட்டது, என்று யோசித்தவாறே அம்பை எடுத்துக் கொண்டு அவனும் கிருஷ்ணன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.
நால்வரும் கிருஷ்ணரை அடைந்த பிறகு அவரவர் தாங்கள் கண்ட காட்சிகள் குறித்தும், அதற்குள் அவர்களுக்குள் இருந்த சந்தேகங்கள் குறித்தும், கிருஷ்ணரிடம் கேட்கத் துவங்கினர். வழக்கமான மெல்லிய புன்னகையோடு அவர்களின் சந்தேகத்தை விளக்கத் துவங்கினார்.
முதலில் அர்ஜுனனின் சந்தேகத்திற்கு விடை அளிக்க துவங்கியவர்..! அர்ஜுனா நீ கண்ட குயிலைப் போல கலியுகத்தில் இனிமையாக பேசும் இயல்பையும், அறிவையும் கொண்ட அகன்ற அறிவையும் கொண்ட போலி மதகுருக்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்களாகவே இருப்பார்கள் என்றார்.
இரண்டாவது பீமனின் சந்தேகத்திற்கு விடை அளிக்க துவங்கிய கிருஷ்ணர்..! பீமா கலியுகத்தில் மிகுதியாக செல்வங்கள் உடைய செல்வந்தர்கள் பலர் வாழ்வார்கள், அதோடு அவர்களுக்கு மத்தியில் ஏழைகளும் வாழ்வார்கள், ஆனால் அந்த செல்வந்தர்களிடம் செல்வம் இருந்தாலும், அதில் ஒரு சிறிய பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள்.
தங்களிடம் எல்லையற்ற செல்வங்கள் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் தவறான வழிகளில் செல்வத்தை ஈட்டி சேமித்து வைப்பார்கள். ஒருபக்கம் செல்வந்தர்கள் நாளுக்குநாள் செல்வத்தை சேர்க்கையில், மறுபக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள். இதைத்தான் நீ கண்ட கிணற்றின் காற்று உணர்த்துகிறது என்றார்.
மூன்றாவது சகாதேவனின் சந்தேகத்திற்கு விடை அளிக்க துவங்கிய கிருஷ்ணன்..! சகாதேவா கலியுகத்தில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் மீது கண்மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது அவர்கள் கொண்டுள்ள அளவற்ற பாசத்தால் பிள்ளைகள் தவறுகள் செய்தாலும் அதை பொருட்படுத்தாமல் பிள்ளைகளின் நெறிதவறிய வாழ்விற்கு தாங்களே காரணம் ஆவார்கள்.
பாசத்தால் செய்யும் செயலால் பிள்ளைகளின் எதிர்காலம் துன்ப பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறந்து அவர்கள் பல செயல்களை செய்வார்கள். அதன் விளைவாக பிள்ளைகள் பலர் தவறான வழிகளில் துணிந்து சென்று துன்பக் கடலில் மூழ்கி போவார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாகும் ஒரு நிலை கலியுகத்தில் இருக்கும். அதைத்தான் அந்தப் பசுவின் செயல் உனக்கு உணர்த்துகிறது என்றார்.
நான்காவது நகுலனின் சந்தேகத்திற்கு விடை அளிக்க தொடங்கிய கிருஷ்ணன்..! நகுலா கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் அறிவுரைகளை கேட்காமல் நல்லொழுக்கங்களில் இருந்து நீங்கி தறிகெட்டு நடப்பார்கள். அவர்களுக்கு யார் நன்மைகளை எடுத்துக் கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் இப்படி கட்டுப்பாடின்றி போகும் அவர்களை தடுத்து நிறுத்தி நிதானப் படுத்தும் சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு. அதை தான் அந்தப் பாறையின் காற்று உனக்கு உணர்த்துகின்றது என்றார்.
கிருஷ்ணனின் இந்த விளக்கத்தைக் கேட்டு அவர்கள் நால்வரும் தெளிவு பெற்றனர். அதேபோல உத்தவரும் தெரிந்து கொண்டார், என்பது உத்தவ கீதையில் அவர் தெளிவு படுத்தினர்.