விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்ட 5 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இஸ்ரோ விண்வெளிக்கு 75 செயற்கைக்கோள்களை ஏவும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அந்தத் திட்டத்தில் தமிழகம் சார்பில் அகஸ்தியர் என்ற பெயரில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற 75 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரிக்கையூர் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ராஜன், மாணவி ரேவதி, கெங்கரை அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சரவணன், மாணவி மஞ்சுளா, கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சரவணன் ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு முன்னால் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, செயற்கை கோள் விஞ்ஞானிகள் ஆர்.எம்.வாசகம், வெங்கடேஷ், இளங்கோவன் ஆகியோர் ஆன்லைன் மூலம் செயற்கைக்கோள் தயாரிப்பது, செயல்பாடுகள் குறித்து வகுப்புகள் எடுத்தனர்.
மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் எடுக்கும் பாடங்களை பதிவிறக்கம் செய்து கற்பித்து வந்தனர். இந்நிலையில் மாணவர்கள் 5 பேரும் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் 5-ஆம் தேதி வரை பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் மாணவ மாணவிகள் செயற்கைக்கோள் தயாரிப்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் மாணவ மாணவிகள் 5 பேரையும் கெங்கரை ஊராட்சி தலைவர் முருகன் அழைத்து சென்று ஊட்டி மாவட்ட ஆட்சியர் அம்ரித்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அங்கு மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து கெங்கரை ஊராட்சித் தலைவர் முருகன் கூறுவதாது, தன்னார்வ தொண்டு அமைப்பின் மூலமாக இஸ்ரோவின் விண்வெளி கல்வித் திட்டத்தில் பழங்குடியின மாணவ மாணவிகள் பங்கு பெற வேண்டும் என்பதற்காக இஸ்ரோ-விடம் அனுமதி பெற்றோம். தற்போது மாணவ மாணவிகள் 5 பேருக்கும் நேர்முக தேர்வுகள் நடைபெற உள்ளது. அவர்கள் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் வகுப்பில் கலந்துகொண்டு செயற்கைக்கோள் தயாரிப்பு முறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.