சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
இதனிடையே மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, ”சென்னை வண்ணாரப்பேட்டையில் குடிமக்களின் தேசிய பதிவு (என்ஆர்சி) பேரணியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டிக்கின்றேன். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமான சட்டம் என்பதால் அதனை பலரும் எதிர்க்கின்றார்கள். அந்தவகையில் காங்கிரஸ் கட்சியும் அந்தச் சட்டத்தை வன்மையாக எதிர்க்கின்றது.
முமையாக சிஏஏ, என்ஆர்சி போன்ற அனைத்தும் இஸ்லாமிய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதற்காக எடுக்கப்படுகின்ற முயற்சிதான். இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் மட்டுமல்ல பல தரப்பினர் இளைஞர்கள், மாணவர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். அதனால் நாட்டின் ஜனநாயகத்துக்காக போராடுபவர்கள் மீது இன்றைக்கு காவல் துறையே தாக்குவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.
டாக்டர் கபில் கான் உத்தரபிரதேசத்தில ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல்தான் குழந்தைகள் இறந்து போனார்கள் என்ற உண்மையை கூறியதால் அவர் மீது பொய் வழக்குகள் போட்டு அன்று அவரை சிறையில் அடைத்தார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேசினார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை மீண்டும் கைது செய்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொருளாதார மந்தநிலை, ஜிஎஸ்டி போன்றவை தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டியில் திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே தொழில்வளங்கள் பெருகும், இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்று கூறினார்.