இ.எஸ்.ஐ மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் கொண்டு வர வேண்டும் என்று சட்டசபையில் சி.கே. சரஸ்வதி எம்எல்ஏ கூறினார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சி.கே. சரஸ்வதி எம்.எல்.ஏ சட்டசபையில் கூறியதாவது, அறநிலையதுறையின் கீழ் அமைந்துள்ள கோவில் பணியாளர்களுக்கு ஆலய ஆன்மிக சேவை பயிற்சி கொடுக்க வேண்டும். பல கோவில்களில் செயல் அலுவலர் அலுவலகங்கள் கோவில் வளாகத்திற்கு உள்ளே தள்ளி அமைந்துள்ளது. இதனால் பல செயல் அலுவலர்கள் காலணிகளை அணிந்து கொண்டு உள்ளே வருகின்றனர்.
மேலும் அசைவ உணவு உண்பதும் நடக்கிறது. இதற்கு தீர்வு காண செயல் அலுவலர் அலுவலகங்களை கோவிலுக்கு வெளியே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு 2 லட்சம் பக்தர்கள் வருகின்றார்கள். கோவில் 400 சதுர அடியில் அமைந்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண தென்பக்கம் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுக்க வேண்டும். மேலும் கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவில் புனரமைத்து நித்திய கால பூஜைகள், இசை பள்ளிகள் மூலம் சிறுவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்றார்.
இதனை அடுத்து கொடிமுடி பிலிக்கல்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும். ஊஞ்சலூர் அருகில் உள்ள நாகேஸ்வரர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சோலாரில் கல்வி கட்டண சலுகை பெறுகின்ற வகையில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க அரசு இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும். பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் கொண்டு வர வேண்டும். ஈரோட்டில் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இதை தொடர்ந்து ஈரோட்டில் 80 அடி ரோடு தொடர்பான வழக்கு விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும். மொடக்குறிச்சி தொகுதியில் பட்டா தொடர்பான பிரச்சினைக்கு சிறப்பு முகாம் நடத்த வேண்டும். அனுமன்நதி, குரங்கன்பள்ளம் ஓடையினை தூர்வாரி தடுப்பணை கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். தென்னை அதன் விளை பொருட்கள் சார்ந்த தொழிற்சாலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சாவடிபாளையம், பஞ்சலங்கபுரம் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலம் இடையில் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே அந்த ரோட்டில் நேர்பாட்டினை மாற்றி அமைத்து தருவதற்கு அரசு முன் வரவேண்டும் என்று கூறினார்.