ஈரோடு மாவட்டத்திற்குள் வர இ பாஸ் அப்ளை செய்யும் போது கொரோனா பரிசோதனை சான்றிதழை இணைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து ஆறாவது கட்டமாக அமுலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தைப் பொருத்தவரை ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல வேண்டுமெனில் இ பாஸ் கட்டாயமாக தேவைப்படுகிறது. இந்த இ பாஸ் திருமணம், இறப்பு, மருத்துவ எமர்ஜென்சி உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக மட்டுமே வழங்கப்படும். மேலும் ஒரு சில கட்டுப்பாடுகளுடனும் இந்த இ பாஸ் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் வெளிமாநில, மாவட்டங்களில் இருந்து வரும் மக்களால் கொரோனா பாதிப்பு இரண்டாவது கட்டமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் தங்களது சொந்த மாவட்டத்திற்கு வர விரும்புவர்களால் பிரச்சனையில்லை. ஆனால் திருமணம், இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வந்து செல்பவர்களால் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், இனி ஈரோடு மாவட்டத்திற்கு திருமணம், இறப்பு, அல்லது மருத்துவ எமர்ஜென்சி உள்ளிட்ட காரணங்களுக்காக வருபவர்கள் இ பாஸ் அப்ளை செய்யும்போது தங்களுக்கான கொரோனா பரிசோதனை சான்றிதழையும் இணைத்து அப்ளை செய்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையை அந்தந்த மாவட்டங்களில் பிசிஆர் என்னும் முறை மூலம் மக்கள் மேற்கொண்டு முடிவு வெளியான சான்றிதழை அதனுடன் இணைத்து விண்ணப்பித்து முறையான அனுமதி பெற்று மாவட்டத்திற்குள் நுழையுமாறு உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஈரோடு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.