தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு மாநில எல்லைகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கபட்டுள்ளன.
கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அடுத்த ஜூஜூவாடி வழியாக தமிழகத்திற்கு வரும் வாகனங்களை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இ-பதிவு செய்யாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.
கேரள மாநிலத்தின் தமிழக எல்லையான தாளவாடி சோதனைச்சாவடி தற்காலிகமாக மூடப்பட்டது. அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வாகனங்கள் அங்கு அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களில் வரும் நபர்களுக்கு இ-பதிவு இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் போலீசார் அனுமதிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க 27 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கற்கநல்லா உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்யப்படுகின்றனர். இ-பதிவு செய்யாமல் வருபவர்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். தேவை இல்லாமல் வருபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.