இபிஎஸ் ஆல் ஒதுக்கப்படும் நிர்வாகிகளை ஓபிஎஸ் தன் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 11-ஆம் தேதி பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இபிஎஸ் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீக்கியதோடு, அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதேப்போன்று ஓ, பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.முனுசாமி உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் வகித்த பொருளாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் நிலையில், இபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களால் ஒதுக்கப்படும் நிர்வாகிகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஓபிஎஸ் யாரையும் வலுக்கட்டாயமாக இழுக்க வேண்டாம் எனவும், அவர்களாகவே நம் பக்கம் வருவார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வர இருப்பதால் தற்போது ஓபிஎஸ் அவரை சந்தித்து பேச இருக்கிறார். இதற்கான வேலைகளில் தற்போது ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.