தமிழகத்தில் அதிமுகவை மீட்டு டிடிவி தினகரனை முதல்வர் இருக்கையில் அமர வைக்க அமமுக தீர்மானம் செய்துள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய கட்சி தினகரனுக்கு முழு அதிகாரம், சசிகலா நல்லாசியுடன் அதிமுகவை மீட்டு டிடிவி தினகரனை முதல்வர் இருக்கையில் அமர வைக்க அயராது உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென் மாவட்ட அமைச்சர்கள் விரைவில் சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.