பருவநிலை மாற்றம் சர்வதேச அளவில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் பருவம் தவறிய மழை, வெள்ளம் ஆகிய இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஈரானில் பல வருடங்களாக வறட்சியை சந்தித்துவந்த தெற்கு பராஸ் மாகாணத்தில் பருவநிலை மாற்றத்தின் விளைவால் நேற்று முன்தினம் திடீரென்று கனமழை கொட்டித்தீர்த்தது. அந்த மாகாணத்தின் எஸ்தாபன் நகரில் இடை விடாமல் கொட்டிய மழையால் அங்குள்ள நீர் நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து கரைபுரண்டு ஓடியது. அத்துடன் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 100க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி இருக்கிறது.
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் இறந்ததாகவும், 6 பேர் மாயமாகி இருப்பதாகவும் பராஸ் மாகாணத்தின் ஆளுநர் யூசுப் கரேகர் தெரிவித்தார். இதனிடையில் வெள்ளத்தில் சிக்கிய டஜன் கணக்கானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாக கூறிய அவர், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 2018 ம் வருடம் மார்ச் மாதம் பராஸ் மாகாணத்தில் இதேபோல் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் 44 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.