Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி : மக்களின் எதிர்பார்புகள் என்ன?

விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழகமே தயாராகி வருகிறது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆதரவு திரட்டும் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், தொகுதி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தந்தை பெரியார் கணிதமேதை ராமானுஜர் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்றழைக்கப்படும் ஈரோடு மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளடக்கியது ஈரோடு கிழக்கு தொகுதி. ஒருங்கிணைந்த ஈரோட்டில் இருந்து பிரிக்கப்பட்டு, 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு இரண்டு சட்ட மன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 2011ஆம் ஆண்டில் அப்போதைய தேமுதிக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த வி.சி சந்திரகுமார் சட்டமன்ற உறுப்பினரானார்.

2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த தொகுதியை அதிமுக கைப்பற்றியது. தென்னரசு தற்போதைய எம்எல்ஏவாக இருக்கிறார். ஈரோடு ஒருங்கிணைந்த தொகுதியாக இருந்தபோது 1957 முதல் 2006 வரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 5முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 2முறையும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,23,213 ஆகும். ஆண் வாக்காளர்களை விட 4,736 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

ஜவுளி உற்பத்தி நகரம் என்ற பெருமை ஒரு புறம் என்றால் மறுபுறம் அதனால் ஏற்படும் சாயக்கழிவு நீர் ஈரோட்டில் தீர்க்கப்படாத பிரச்சனைகளில் ஒன்று. சில சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இன்றளவும் காவிரி நதியையும், காலிங்கராயன் கால்வாயையும் பால்படுத்தி வருகின்றன.  ஈரோடு நகருக்கு பவானி அருகே ஊராட்சி கோட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவர திட்டமிடப்பட்ட பணிகள் ஆண்டுகளை கடந்தும்  நிறைவேறவில்லை. பாதாள சாக்கடை திட்டத்துக்காக அடுத்தடுத்து தோண்டப்பட்டு சரிவர மூடப்படாத குழிகள், பராமரிப்பில்லாத சாலைகள் போன்றவற்றை சரிசெய்ய வேண்டும் என தொகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜவுளி உற்பத்திக்கு பெயர்பெற்ற ஈரோட்டில் புதிய தொழில் கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும் உயர் தொழில் நுட்ப பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சரியான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதும் வாக்காளர்கள் எதிர்பார்ப்பு.

Categories

Tech |