ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சுதா என்பவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ உதவியாளர் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை சுதா வேலைக்கு எப்போதும்போல் சென்ற பொழுது அவரிடம் மருத்துவமனையை கூட்டி பெருக்க வேண்டும் எனவும் கழிவறையை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவ பணியாளர் ஒருவர் சொன்னதோடு தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகின்றது.
இதற்கு சுதா எதிர்ப்பு தெரிவித்து இது எங்களுடைய வேலை இல்லை எனவும் நாங்கள் செவிலியர்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றோம் என கூறி இருக்கின்றார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுதா மிகுந்த மன வேதனை அடைந்து அங்கிருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கின்றார். இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். இதைதொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றார்கள். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.