ஈரோடு மாநகராட்சியில் 7 பதவிகளுக்கான இடங்களில் பெண்களே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியில் கவுன்சிலர் தேர்தல் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதன்பின் 60 பேர் கவுன்சிலராக பதவியேற்று கொண்டனர். பதவியேற்றவர்களில் ஒருவர் மேயராகவும், மற்றொருவர் துணை மேயராகவும் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் 4 மண்டலங்களுக்கு தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சியின் நிலைக்குழு தலைவர்கள், நியமன குழு உறுப்பினர் தேர்தலை நேற்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் நடத்தினார்கள்.
இந்தத் தேர்தலில் தலைவர், உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புகின்ற கவுன்சிலர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தார். இதை அடுத்து ஏழு பதவிகளுக்கும் 7 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் ஏழு பேருமே போட்டி இல்லாமல் வெற்றி பெற்றதாக ஆணையாளர் சிவகுமார் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சி குழுக்களுக்கு புதிதாக வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் விவரம்: பொது சுகாதார குழு தலைவராக மங்கையர்க்கரசியும், கல்வி குழு தலைவராக பி. கீர்த்தனாவும், கணக்கு குழு தலைவராக புவனேஸ்வரியும், வரிவிதிப்பு, நிதி குழு தலைவராக என். மல்லிகாவும், பணிகள் குழு தலைவராக சபுராமா மின்ஹாக்வும், நியமனக் குழு உறுப்பினராக விஜயலட்சுமியும், நகரமைப்புக்குழு தலைவராக ஜெயந்தி ஆகிய ஏழு பேரும் போட்டி இல்லாமல் வெற்றி பெற்றுள்ளார்கள்.