ஈரோடு மாவட்டத்தில் உள்ள 30 கடைகளின் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினார்கள்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி நால்ரோடுலிருந்து சூரம்பட்டிவலசுக்கு செல்லும் எஸ்.கே.சி.ரோட்டின் ஓரமாக சாக்கடை செல்கின்ற நிலையில் இதன் மீது கடைக்காரர்கள் கான்கிரீட் அமைத்து இருப்பதால் சாக்கடையை தூர்வார முடியாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் மழை பெய்யும் பொழுது மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் சாலையோரமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள்.
இதனால் சாலையோரமாக உள்ள கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்த வீட்டின் உரிமையாளர்களுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். ஆனால் ஆக்கிரமிப்புகளை யாரும் அகற்றாததால் மாநகராட்சி சுகாதார முகம்மது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர் கண்ணன், பொறியாளர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் சூரம்பட்டி எஸ்.கே.சி.ரோட்டுக்கு நேற்று காலை சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கினார்கள். 30 கடைகள் மற்றும் வீடுகளின் முன்பு ஆக்கிரமிக்கப்பட்டதை அகற்றினார்கள். இதனால் சூரம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.