ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி இதுவாகும். ஈரோடு மாநகராட்சியின் குறிப்பிட்ட பகுதி மற்றும் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் ஈரோடு மேற்கு தொகுதியில் அடக்கம். கிராமங்களும் நகரங்களும் சரிபாதி அளவில் இந்த தொகுதியில் உள்ளனர். 2008 தொகுதி மறுசீரமைப்பின் போது உருவான தொகுதி இதுவாகும். அதன்பிறகு நடைபெற்ற 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவை சேர்ந்த கே.வி. ராமலிங்கமே வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியை பொறுத்தவரை ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் 2,82,882 ஆகும்.
மஞ்சளுக்கு பெயர் பெற்ற ஈரோட்டில் அதன் உற்பத்தியை அதிகரிக்கவும், மகத்துவத்தை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இங்குள்ளவர்களின் எதிர்பார்ப்பாகும். ஈரோடு பெயருக்கு காரணமாக இரண்டு ஓடைகளில் ஒன்றான பெரும்பள்ளம் ஓடை ஸ்மார்ட் சிட்டி திட்டம் புனரமைப்பு என்ற பெயரில் சீரழிக்கப்பட்டு இருப்பது தொகுதி வாசிகளை அதிருப்த்தியடைய செய்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கனி ராவுத்தர் குளம் ஆக்கிரமிப்புகளால் சுருங்கியதை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கைகள் இல்லை.
ஈரோடு மேற்கு தொகுதியில் கனிசமான நெசவாளர்கள் உள்ளனர். வீரப்பன்சத்திரம், சித்தோடு பகுதிகளில் ஏறத்தாழ 50 ஆயிரம் விசைத்தறிகள் இருக்கின்றன. கைத்தறியை போல் விசைத்தறி துறைக்கும் தனி அமைச்சகம், ஆண்டு முழுவதும் இலவச வேட்டி சேலை உற்பத்தி, மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு, ஜவுளி பூங்கா என விசைத்தறியாளர்களின் கோரிக்கை நீள்கிறது. தந்தை பெரியாரை கெளரவ தலைவராக கொண்டு இயங்கிய பழமையான சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றப்படும் என்று கடந்த தேர்தலில் வாக்குறுதியாகவும் அளித்திருந்தார் தற்போதய எம்.எல்.ஏ. ராமலிங்கம். ஆனால் அதற்கான முயற்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது தொகுதிவாசிகளின் புகாராகும். தீராத பிரச்சனைகள் வரக்கூடிய தேர்தலில் நிச்சயம் இந்த தொகுதிகளில் எதிரொலிக்கும் என்கிறார்கள் ஈரோடு மேற்கு தொகுதி வாக்காளர்கள்.