உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களின் நலன் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது உக்ரைன் நாட்டிலிருந்து தமிழக மாணவர்களை மீட்க ஐஏஎஸ் அதிகாரி ஜெசிந்தா தலைமையில் வாட்ஸ்அப் குழு அமைத்து உக்ரைனிலிருந்து தமிழ்நாடு மாணவர்கள் மீட்கப்படுவர் எனவும் இதற்கான செலவை அரசே ஏற்கும் எனவும் முதல்வர் தெரிவித்தார். அந்த வகையில் உக்ரைன் நாட்டிலிருந்து 1,890 தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். மாணவர்களை மீட்க எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அதிகாரிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது.
உக்ரைனிலிருந்து இறுதியாக வந்த மாணவர்கள்குழுவை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து உக்ரைனிலிருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் படிப்பைத் தொடர்வது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை ருமேனியா, ஹங்கேரி, கஜகஸ்தான், செக்குடியரசு, போலந்து ஆகிய நாடுகளில் மருத்துவப் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் உதவிகளையும் செய்யும். ஆகவே எங்கு படித்தாலும் தமிழகப மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும். உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று கூறினார்.