உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்காக நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த 24-ஆம் தேதி அன்று உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்யா-உக்ரைன் இடையே பயங்கர போர் வெடித்தது. இதனால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து அந்நாட்டை நிலைகுலைய செய்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அடுத்த 24 மணிநேரத்தில் 7 விமானங்கள் அனுப்பப்பட உள்ளது. ருமேனியாவின் புக்கரெஸ்ட் நகருக்கு 5 விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகருக்கு 2 விமானங்களும் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்தியர்களுக்கு தஞ்சம் கொடுக்க உக்ரைனின் அண்டை நாடுகளுடன் இந்திய வெளியுறவுத்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.