உக்ரைனில் போரை தொடங்கியதற்கான நோக்கத்தில் ரஷ்யா தோல்வி அடைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கருத்து தெரிவித்திருக்கிறார். உக்ரைன் ரஷ்ய போரானது முன்றாவது மாதத்தை தொட்டு இருக்கின்ற நிலையில், போர் தொடங்கிய காலத்திற்கு பிறகு அமெரிக்க அரசு அதிகாரிகள் முதல் முறையாக உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு வந்த அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(Antony Blinken) மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின்(Lloyd Austin) ஆகியோர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி-யை(Zelenskyy) தலைநகர் கீவ்-வில் சந்தித்து பேசினர். அப்போது, ரஷ்யாவின் போர் அத்துமீறல்கள் மற்றும் உக்ரைனின் எதிர்ப்பு நடவடிக்கை அகியவற்றை பிளிங்கன் மற்றும் லாயிட் ஆஸ்டின் கேட்டறிந்தனர். இதையடுத்து போலந்து நாட்டின் எல்லையில் செய்தியாளர்களை சந்தித்த ஆண்டனி பிளிங்கன் மற்றும் லாயிட் ஆஸ்டின் இருவரும், உக்ரைனின் ராணுவ உதவிக்காக அமெரிக்கா 322 மில்லியன் டாலர்கள் வழங்க இருப்பதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும் உக்ரைனின் ராணுவ உதவிகளுக்கு கூடுதலாக 400 மில்லியன் டாலர்களை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள 15 நாடுகள் மற்றும் பால்கன்கள் அகியோர் இணைந்து வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் மீதான போர் தாக்குதலில் ரஷ்யாவின் முக்கிய குறிக்கோள் தோல்வியடைந்து விட்டதாக கூறியுள்ளார்.
இந்த போரில் ரஷ்யா தோல்வியடைந்து வருவதாகவும், உக்ரைன் வெற்றியடைந்து வருவதாகவும் தெரிவித்த பிளிங்கன், ”சுதந்திர உக்ரைன்” புடினின் ரஷ்யாவை விட நீண்டநாள் நீடிக்கப்போவதாக கூறியுள்ளார். மேலும் ரஷ்யா தனது ராணுவம் மற்றும் பொருளாதாரத்தால் உக்ரைனை அடிமையாக்க திட்டமிட்டது, ஆனால் தற்போதைய முடிவுகள் தலைகீழாக அமைந்து இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.