உக்ரைனுக்கு புதிதாக 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க வழங்குவதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து ஐந்து மாதங்களாக நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், ராணுவ உதவியும் வழங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு மேலும் புதிதாக 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. இதில் கூடுதல் ஹிமார்ஸ் சிஸ்டம் ஏவுகணைகளும் அடங்கும்.
இவை உக்ரேனிய ராணுவ படைகள் ரஷ்ய ராணுவ படைகளின் முன் பகுதியை தாக்க உதவியாக இருக்கும். இந்த தொகுப்பில் ரஷ்ய விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளுக்கு எதிராக செயல்படக்கூடிய வான் ஏவுகணைகள், ஜாவெலின் எதிர்ப்பு கவச ராக்கெட்டுகள் மற்றும் பிற வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கின்றது.