ரஷ்யாவுக்கு எதிரான போர் நடவடிக்கையில் உக்ரைனை ஆதரிக்கும் வகையில் கூடுதலாக 63.5 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள புது உதவி தொகுப்பினை பிரித்தானியா வழங்கும் என அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து இருக்கிறார். உக்ரைனின் சுகந்திரதினத்தன்று அறிவிக்கப்படாத சுற்றுப் பயணமாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சென்றார். இந்த பயணத்தின்போது ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு உதவும் வகையில் கூடுதலாக 63.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தொகுப்பினை பிரித்தானிய வழங்கும் என்று அறிவித்தார்.
அதன்படி, டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட அறிக்கையின்படி, சமீபத்திய தொகுப்பில் 2,000 அதி நவீன ட்ரோன்கள் மற்றும் வெடி மருந்துகள் அடங்கும். இது உக்ரைனை ரஷ்யபடைகள் ஆக்கிரமிப்பதை சிறப்பாக கண்காணிக்கவும், இலக்கு வைக்கவும் அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உக்ரைனின் சுகந்திரதின உரையில் பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைனில் என்ன நடக்கிறது என்பது நம் அனைவருக்கும் முக்கியமானது ஆகும். அதனால் தான் ஐக்கிய இராச்சியம் உங்களுடன் இருக்கிறது. இச்செய்தியை வழங்கவே நான் இங்கு வந்துள்ளேன். அத்துடன் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று ஜான்சன் குறிப்பிட்டார்.