ரஷ்யாவின் அடுத்த தாக்குதலானது உக்ரைனில் உள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்தை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா போரின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ரஷ்யப் படைகள் உக்ரைனில் உள்ள எனர்ஹோடர் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடத்தில்தான் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஷியா அணுமின் நிலையம் உள்ளது. எனவே ரஷ்யப் படைகள் இந்த அணுமின் நிலையத்தை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அவர்களிடமிருந்து பாதுகாக்கும் முயற்சியில் உக்ரைன் மக்கள் சபோரிஷியா அணுமின் நிலையத்திற்கு செல்லும் பிரதான பாதைகளில் தற்காலிகமாக தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் தடைகளானது, ஏறக்குறைய 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு, பழைய கார்கள், குப்பை லாரிகள் மற்றும் மணல் மூட்டைகளை கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரேன் மக்கள் அந்தப் பாதையில் ரஷ்யப் படைகள் முன்னேறுவதை தடுக்க, உக்ரேனிய கொடிகளை பிடித்துக்கொண்டு ஒரு மனித தடுப்பை உருவாக்கி, ரஷிய படைகளுக்கு எதிராக முழக்கம் விட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் மீது ரஷ்யப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனை அடுத்து சபோரிஷியாவில் உள்ள அணு உலைக் கட்டுப்பாட்டு மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் வெடித்தால், கடந்த 2011-இல் ஜப்பானில் நடந்த அணு உலை வெடிப்பை விட மோசமான பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என்று கிரீன்பீஸ் இன்டர்நேஷனல் நிபுணர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.