உக்ரைனில் உள்ள ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற ரஷ்யா மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தகவல் மற்றும் செய்திப்பிரிவு இணை இயக்குநா் இவான் நெசயெவ் செய்தியாளா்களிடம் பேசியதாவது “உக்ரைனின் ஸபோரிஷியா நகரில் உள்ள அணுமின் நிலையத்தை ராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என ஐ.நா.வும் பிற நாடுகளும் விடுக்கும் கோரிக்கை நிறைவேற்ற முடியாதது ஆகும்.
அவ்வாறு ராணுவமற்ற பகுதியாக்க வேண்டுமெனில் அங்கிருந்து ரஷ்யப்படையினா் வெளியேற வேண்டியிருக்கும். உக்ரைன் படையினரும் அங்கு போகாமல் இருக்க வேண்டும். எனினும் இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது ஆகும். ஸபோரிஷியா அணுமின் நிலையத்தை ராணுவமற்ற பகுதியாக்கும் நடவடிக்கை நடைமுறைபடுத்தப்பட்டால், அது தற்போது இருப்பதைவிட அந்த அணுசக்தி மையத்தை மேலும் அபாயநிலைக்குத் தள்ளிவிடும்” என்று கூறினார்.