ரஷ்யா, உக்ரைன் மீது 52ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நடந்த தாக்குதலில் உக்ரைனில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் போர் தொடர்ந்து நடந்து வரும் சூழலில் உக்ரைன் படைகள் ரஷ்யாவின் எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேபோல் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுக்க உள்ளதாக எச்சரித்துள்ளது. இந்தப் போர் காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். இதற்கிடையே ஐக்கிய நாடுகள் அவையின் ஐநாவுக்கான முகமை, கடந்த பிப்ரவரி 24 முதல் இதுவரை உக்ரைனில் இருந்து வெளியேறிய 50 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.