உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இருநாட்டு வீரர்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில் போரை நிறுத்த ஐ.நா. அமைப்பு, போப் பிரான்சிஸ், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்து வருகிறது. இதில் ரஷ்யாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றது. இது ஒரு புறம் இருக்க போரானது நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆயுத உதவியும் செய்து வருகிறது. இதனிடையில் இப்போரால் மனித இனத்தில் 5-ல் ஒரு பங்கு சதவீதத்தினருக்கும் கூடுதலானோர் வறுமை, பசியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செக் குடியரசு நாட்டின் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்தபோது “உக்ரைனில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சோகங்களை நாம் அனைவரும் பார்க்கிறோம். எனினும் போரால் அந்நாட்டு எல்லைகளை கடந்து, வளர்ந்து வரும் நாடுகள் மீதும் மவுன தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனித இனத்தில் 5-ல் ஒரு பங்குக்கும் மேலான மக்கள் வறுமை மற்றும் பசி, பட்டினி நிலைக்கு தள்ளப்படகூடும். பல்வேறு தசாப்தங்களாக நாம் காணாத நிலையை எட்டகூடும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து அவர் கூறியதாவது, உலகளவில் உக்ரைன் மற்றும் ரஷ்யா கோதுமை, பார்லியை (வாற்கோதுமை) 30 % உற்பத்தி செய்கிறது.
5-ல் ஒருபங்கு சோளமும், பாதிக்கும் மேலாக சூரியகாந்தி எண்ணெயும் உற்பத்தி செய்யப்படுகிறது என அவர் கூறியுள்ளார். குறைந்தளவில் வளர்ச்சி அடைந்த 45 நாடுகள், மூன்றில் ஒருபங்கு கோதுமையை ரஷ்யா மற்றும் உக்ரைனிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இப்போரால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. விநியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டு தொடங்கியதிலிருந்து கோதுமை மற்றும் சோளம் போன்றவற்றின் விலை 30 % உயர்ந்து விட்டது. அத்துடன் கச்சாஎண்ணெய் விலையும் 60 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்வடைந்துள்ளது. எரிவாயு மற்றும் உரம் போன்றவை இருமடங்கிற்கும் கூடுதலாக விலையேற்றமடைந்து உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.