உக்ரைனிய கடவுச் சீட்டு வைத்து இருக்கும் மக்கள் ரஷ்யாவில் குடியேறவும் காலவரை இன்றி வேலை செய்யவும் அனுமதிக்கும் அரசாணைக்கு விளாடிமிர்புடின் கையெழுத்திட்டு இருக்கிறார். இது புது தொடக்கம் என குறிப்பிட்டுள்ள விளாடிமிர்புடின், உக்ரைனிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் முயற்சி இது எனவும் தெரிவித்துள்ளார். இதுவரையிலும் உக்ரைனியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள 180 தினங்களுக்குள் அதிகபட்சமாக 90 நாட்கள் மட்டுமே ரஷ்யாவில் தங்கமுடியும். நீண்டகாலம் தங்க (அல்லது) வேலை செய்ய ஒருவர் சிறப்பு அங்கீகாரம் அல்லது பணி அனுமதி பெற வேண்டும்.
எனினும் விளாடிமிர்புடின் வெளியிட்டுள்ள அரசாணை காரணமாக ரஷ்யாவில் இனிமேல் உக்ரைனிய மக்கள் சுதந்திரமாக வேலை பார்க்கலாம். எந்த வித அனுமதியும் பெறாமல் வாழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் விண்ணப்பதாரர்களின் கைரேகை பெறப்படுவதுடன், புகைப்படம் எடுத்துக்கொள்ளபடும். மேலும் போதைமருந்து சோதனை மற்றும் தொற்று நோய்களுக்கான சோதனைகளுக்கும் உட்படுத்தப்படும் என்றே தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் (அல்லது) ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுபவர்கள் தவிர்த்து உக்ரைனிய குடிமக்கள் நாடு கடத்தப்படுவதையும் குறித்த அரசாணை தடைசெய்கிறது.
அதன்பின் மற்றொரு அரசாணையில் தாக்குதல் காரணமாக உக்ரைன் (அல்லது) பிரிவினைவாத பிரதேசங்களை விட்டு வெளியேறியவர்கள், ஓய்வூதியம் பெறுவோர், ஊனமுற்றோர் (அல்லது) கர்ப்பிணிப்பெண்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு சமூகக்கொடுப்பனவுகளை வழங்குமாறு புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ரஷ்யா வெளியிட்டுள்ள தரவுகளில் பிப்ரவரி பிற் பகுதியில் தாக்குதல் துவங்கியதிலிருந்து 587,000 குழந்தைகள் உட்பட 3.6 மில்லியன் உக்ரைனிய பிரஜைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் உக்ரைன் குடியுரிமையை துறப்பவர்களுக்கு உடனே ரஷ்யகுடியுரிமை வழங்கப்படும் என்று ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்றை ரஷ்ய அரசாங்கம் வெளியிட்டிருந்தது.