ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனுக்கு ஆதரவளிப்போம் என்று நேட்டோ தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.
நேட்டோ அமைப்பு சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளை பாதுகாப்பதற்காக கடந்த 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.கடந்த 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறிய போது, அதன் ஒரு அங்கமாக உக்ரைன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது.
ரஷ்யாவின் எல்லையை ஒட்டி அமைந்த நாடு நேட்டோவுடன் இணைந்ததால் தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதியது.நேட்டோ உக்ரைனை தங்கள் அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்துகிறது. எனினும் நேட்டோ அமைப்பு இதற்கு உடன்படாததால் இரு தரப்பினர் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இச்சூழலில் ரஷ்யா,உக்ரைன் எல்லை அருகே ஏராளமான படைவீரர்களை குவித்துள்ளது.அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்து அந்நாட்டை தங்களுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றன. இக்குற்றச்சாட்டை மறுத்த ரஷ்யா உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் படை குவிப்புக்கு பதிலடியாகவே தாங்கள் படைகுவிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறியது .
மேலும் மேற்கு உலக நாடுகள் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாகவும், படைகளை அனுப்ப எந்த திட்டமும் இல்லை என்று கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் என்ன செய்வீர்கள் என்ற பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.