உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இஸ்ரேல் பிரதமர் பென்னட் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து 18-வது நாளாக நீடித்து வரும் நிலையில், எப்போது முடிவுக்கு வரும் என உலகநாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில் நாளுக்கு நாள் ரஷ்யப் படைகளின் தாக்குதலானது தீவிரமடைந்து வருகின்றன. இதனால் முக்கிய நகரங்கள் தீக்கிரையாக்கி வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டில் பாதுகாப்பான இடம் என்று ஒன்று இல்லாத அளவுக்கு, ரஷ்ய படைகள் தனது உக்கிரமான தாக்குதல்களை வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில் வான்வெளி மற்றும் தரைவழி மூலம் குண்டுகளை போட்டு முக்கிய நகரங்களை ரஷியா படைகள் அழித்து வருகின்றனர். இதனிடையே இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, ரஷ்ய அதிபர் புதினை இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் நேரில் சந்தித்து பேச தயாராக உள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆனால் ஏற்கனவே இது போன்ற நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு புதின் நிராகரித்து விட்ட நிலையில், ஜெலன்ஸ்கியின் இந்த அறிவிப்பை மட்டும் அவர் ஏற்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து ரஷ்ய பிரதமர் புதின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க தான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். அதே சமயம் உக்ரைன்-ரஷியா இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையானது, அடுத்த வாரம் தொடங்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகரான மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.